திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிக வாகனங்கள் நகருக்குள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். அதிலும் விடுமுறை நாட்களில் அண்ணாமலையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய அதிகளவிலான பக்தர்கள் வருவர்.
அந்த வகையில் தற்போது திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலால் சுவாமி தரிசனம் செய்ய பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர் ஏ.வ. வேலு தலைமையில் 4 முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளி மாநில வாகனங்கள் மாடவீதிகளில் அனுமதிக்க கூடாது என்றும் பேருந்துகள் மாடவீதிகளில் செல்லாமல் மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இதனால் எந்த பயனும் இல்லாமல் நகர் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. மேலும் போக்குவரத்து காவல்துறையினரின் பற்றாக்குறையால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்துக் காவல் துறையினர் திணறி வருகின்றனர். திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் நுழைவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்துக் கிடக்கும நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.