2023-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மஸ்ஸே ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை ராணி முகர்ஜி தட்டிச் சென்றுள்ளார்.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்து ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டிய படம் ஜவான். இப்படத்திற்காக 2023-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை நடிகர் ஷாருக்கானுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் 12th Fail படத்திற்காக விக்ராந்த் மஸ்ஸே-வுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நார்வே நாட்டின் சட்டதிட்டங்கள் புரியாமல் தன்னுடைய குழந்தையை காப்பாற்ற போராடும் தாயாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ராணி முகர்ஜிக்கு 2023-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக 12th Fail அறிவிக்கப்பட்டுள்ளது. படிப்பின் மேன்மையை கலைநயத்துடன் எடுத்துரைத்த இயக்குநர் விது வினோத் சோப்ரா இயக்கிய இப்படம் தேசிய விருது பெற்றுள்ளது. பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய கேரளா ஸ்டோரி படத்தை இயக்கிய சுதிப்தோ சென், 2023-ம் ஆண்டின் சிறந்த இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2023-ம் ஆண்டுக்கான சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக கரண் ஜோஹர் இயக்கிய ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஜவான் படத்தில் இடம்பெற்ற சலியே பாடலுக்காக 2023-ம் ஆண்டுக்கான சிறந்த பின்னணி பாடகியாக ஷில்பா ராவ் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரேமிஸ்துன்னா படத்தில் இடம்பெற்ற பேபி பாடலுக்காக 2023-ம் ஆண்டுக்கான சிறந்த பின்னணி பாடகருக்கான விருது ரோகித்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த துணை நடிகையாக மலையாள படமான உள்ளொழுக்கு படத்தில் நடித்ததற்காக நடிகை ஊர்வசி தேர்வு செய்யப்பட்டுள்ளார். non feature பிரிவில் தமிழில் வெளியான லிட்டில் விங்ஸ் என்ற ஆவண படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.