பீகாரில் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்திய வாக்குரிமை யாத்திரைக்கு, அம்மாநில மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.
அதேநேரம் இப்பேரணியில், பிரதமர் மோடியின் தாயார் குறித்து அவதூறாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. இதுகுறித்து பிரதமர் மோடி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ள நிலையில்,அவருக்கு மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் துன்புறுத்தல், மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட்து போன்ற சம்பவங்கள் நினைவிருக்கிறதா?
என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பீகாரின் தர்பங்காவில் உள்ள பித்தௌலி கிராமத்தில் நடைபெற்ற வாக்காளர் உரிமை யாத்திரையின் போது, பிரதமர் மோடி, அவரது தாயார் ஆகியோர் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக, ரிஸ்வி என்பவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து முழுமையான தகவல்கள் தெரியவராத நிலையில், பாட்னாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை பாஜக தொண்டர்கள் முற்றுகையிட்டனர். இதனால், காங்கிரஸ் – பாஜக தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், பீகாரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கூட்டுறவு சங்கத்தை காணொலி வழியாக திறந்து வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, பாரம்பரியமிக்க பீகாரில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ந்ததை தன்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை என்றார். தாய்தான் நமது உலகம்; தாய்தான் நமது சுயமரியாதை. அந்த அவதூறு கருத்து தன் தாய்க்கு மட்டும் அவமானம் அல்ல. நாட்டில் உள்ள தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவமானம். தன் இதயத்தில் எவ்வளவு வலி இருக்கிறதோ அதே வலி பீகார் மக்களுக்கும் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ராயல் குடும்பத்தில் பிறந்த இளவரசரால் ஏழைத்தாயின் வலியை புரிந்துகொள்ள முடியாது என வேதனைத் தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தனது தாயார் பற்றி நீலிக் கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி, பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேசுவாரா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
2017ம் ஆண்டு, ஹரியானா மாநிலத்தில் காரில் சென்று கொண்டிருந்த சேர்ந்த இளம்பெண்ணிற்கு, பாஜக பிரமுகரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹரியானா மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் மகளான பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அம்மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஷ் கைது செய்யப்பட்டார்.
ஆனால் அவருக்கு என்ன தண்டனை கிடைத்தது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைத்ததா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது, ஊடகங்களுக்கு பேட்டியளித்த மாநில பாஜக பிரமுகரான ராம்வீர் பாஹ்டி, அந்தப் பெண் ஏன் இரவு 12 மணிக்கு மேல் வெளியில் வர வேண்டும்? தனது மகள் இரவு வீட்டிற்கு வந்துவிட்டாரா அல்லது வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டியது பெற்றோர்களின் கடமை என பேசி சர்ச்சையில் சிக்கியது தனி கதை. ஹ
இன்னொரு பக்கம் டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரங்கனைகள் நடத்திய போராட்டம் ஏன் எதற்கு என்பது உலகமே அறிந்த விசயம். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் ஷரன் சிங் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.
காமென்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்காக பதக்கங்களை வென்று கொடுத்த வீராங்கனையின் அந்த கண்ணீர் போராட்டம் என்ன ஆனது. அவருக்கு ஆதரவாக போராடிய சக வீரர்களான சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோரை பாஜக அரசு எப்படி கையாண்டது என்பது பிரதமர் மோடிக்கு தெரியாதா எனவும் விமர்சித்துள்ளனர்.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றபோதும் கூட, இதில் குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷண் ஷரன் சிங் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்யவில்லை. பிரதமர் மோடியின் பாஜக அரசும் அவருக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதைவிட கொடுமையின் உச்சமாக பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில்,பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது, சர்வதேச அரங்கில் இந்தியாவை வெட்கித் தலைகுனிய வைத்தது.
மணிப்பூரில் உள்ள மெய்தேய் – குகி சமூகத்தினருக்கு இடையே மோதல்கள் ஏற்பட்ட நிலையில், இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதோடு, அதன் காணொலியும் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் நடைபெற்றதை கேள்விப்பட்ட, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, பாதிக்கப்பட்ட மணிப்பூர் பெண்களுக்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவித்திருந்தார். அப்போதும் கூட மணிப்பூருக்கு நேரில் செல்லாத பிரதமர் மோடி, இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்காமல் தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார். ஆனால் பிரதமர் மோடிக்கு, வன்முறைகள் நடந்து இரண்டாண்டுகளுக்குப் பின்னரே மணிப்பூர் செல்ல மனம் முன்வந்துள்ளது. (இன்னும் உறுதியாகவில்லை)
இந்த வரிசையில் சமீபத்தில், பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தில், பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால், கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இன்னொரு பக்கம், பாஜக ஆளும் குஜராத்தில், பெண்கள் பாலியல் குற்றங்களில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என, அம்மாநில காவல்துறை சமீபத்தில் போஸ்டர் அடித்து ஓட்டிய சம்பவம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
அதாவது காவல்துறை சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில், “பெண்கள் இரவு விருந்துகளுக்குச் செல்ல வேண்டாம், மீறிச் சென்றால் பாலியல் வன்முறைக்குள்ளாகலாம்”, “தனிமையான, இருட்டான இடங்களுக்கு நண்பர்களுடன் செல்ல வேண்டாம், பாலியல் வன்முறை நடந்தால் என்ன செய்வீர்கள்?” போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இது, பெண்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்லும் சூழ்நிலையே பாலியல் வன்முறைக்கு வழிவகுக்கிறது என வலியுறுத்தும் வகையில் இருப்பதாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
பெண்களுக்கு பாலியல் அத்துமீறல்கள் நடந்தபோதெல்லாம் அமைதியாக இருந்த பிரதமர் மோடி, தனது தாயார் குறித்து அவதூறு கருத்து (?) வெளியானதும் மக்களை ஏமாற்ற நீலிக் கண்ணீர் வடிப்பது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.