வன்னிய சங்க தலைவராக இருந்த ஜெ.குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கில், இயக்குநர் கெளதமன் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெ.குருவின் மனைவி கல்யாணி, மகள் விருதாம்பிகை ஆகியோர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், வன்னியர் சங்க தலைவராகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க தங்கள் குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தாகவும் ஆனால் பாமக நிறுவனர் இராமதாஸ்க்கு மிக நெருக்கமான இயக்குநர் கெளதமன், படையாண்ட மாவீரா என்ற பெயரில் காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படத்தை தங்கள் அனுமதி பெறாமல் எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டு வரும் மே 23 ம் தேதி திரைப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளதாகவும், ஜெ. குருவின் குடும்பத்தினர் அனுமதி பெறாமல் எடுக்கப்பட்டுள்ள படையாண்ட மாவீரா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெ. குரு மரணமடைந்த போது அவரது உடலை குடும்பத்தினர் பார்க்கவிடாமல் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தடுத்தாகவும், ஜெ.குருவின் மரணத்தில் தங்கள் குடும்பத்திற்கு சந்தேகம் இருக்கும் நிலையில், ராமதாஸின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் இயக்குநர் கெளதமன், படையாண்ட மாவீரா என்ற திரைப்படத்தை அனுமதி பெறாமல் எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இயக்குநர் கெளதமன், திரைப்படத்தில், மறைந்த ஜெ.குருவை தவறாக சித்தரிக்க வாய்ப்புள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி,சுதா, மனுவுக்கு இயக்குநர் கெளதமன் மே 15 ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.