அழகான ஒன் -லைன் அதற்கு ஏற்றது போல் அமைக்கப்பட்ட திரைக்கதை. பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கோ அல்லது பதைபதைக்கும் காட்சிகளோ எதுவும் இல்லை. இதற்கும் சர்சைகள் – பிரச்சனைக்குரிய கருத்துகள், என்று படம் முழுக்க எழுத ஆயிரம் விஷயங்கள் இருந்த போதிலும், முற்றிலுமாக அதை தவிர்த்து விட்டு எல்லோரும் ரசிக்கும் படியாக ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள். இந்த டூரிஸ்ட் பேம்லி படக்குழு ..
டூரிஸ்ட் பேம்லி, கதை என்று ஒன்றுமில்லை, இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக புலம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு ஈழத்தமிழர் குடும்பம். அவர்களின் “அகதி” என்கிற சொற்பதத்தை தவிர்த்து இந்தியர்கள் ஆனார்களா ? இல்லையா ? என்பது தான் கதையே.. இயக்குநர் அபிஷன் ஜிவிந்த் அப்படி தான் சொல்ல நினைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. படத்தில் ஒரு சிங் குடும்பமும் இருக்கிறது. அவர்கள் ஈழத்தமிழ் பேசி நாயகன் குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். “தமிழர்கள்” மட்டுமே ஈழத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லையல்லவா??..
திரைக்கதை எழுதுவது எப்படி என்று தமிழில் ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் இருக்கும். எல்லாம் நம் சினிமா ஆர்வலர்கள் எழுதியவை தான். ஆனால் , அந்த புத்தகத்தால் திரைக்கதை எழுதி பழகிய ஒரு வாசகனையும் நாம் கண்டுபிடிக்க முடியாது. காரணம் அந்த திரைக்கதை எழுதுவது எப்படி என்கிற புத்தகங்களின் லட்சணம் அப்படி.
” மாஸ்டர்” படம் என்று நினைக்கிறேன் அந்த படத்தின் திரைக்கதை புத்தக வடிவம் ருபாய் 650-ற்கு கடந்த புத்தக கண்காட்சியில் விற்கப்பட்டது. பல இளைஞர்கள் ஆர்வமுடன் வாங்கி புத்தக அலமாரியில் வைத்தாக கேள்விப்பட்டேன். அதனால் பாதிக்கப்பட்ட நண்பன் ஒருவன் சொன்னது. ” அந்த புக்கு வாங்குறதுக்கு பதில் இந்த படத்தை இன்னும் ரெண்டு தடவை பார்த்திருக்கலாம்” என்று.
அது உண்மை தான். படத்தின் முதல் பிரேமில் கதை தொடங்குகிறார்கள். அதே பிரேமில் சிக்கலும் வருகிறது. அதே பிரேமில் தீர்வும் கிடைக்கிறது. ஒரு காட்சியின் முழுவடிவம் இப்படி தான் எழுதப்பட்டு இருக்கிறது. எங்கே தொடங்கி எங்கே முடியவேண்டும் என்று இயக்குநருக்கு தெரிந்திருக்கிறது. முதலில் சொன்னேன் அல்லவா?? படத்தின் சர்ச்சைகுரிய – வசனங்கள் காட்சிகள் வைக்க நிறைய இடங்கள் இருந்தும் அதை தவிர்த்து இருக்கிறார்கள் என்று அது முதல் காட்சியில் இருந்தே தொடங்குகிறது என்பது தான் சிறப்பு.
இலங்கை என்றாலே தமிழ் நாட்டில் பிரச்சனைக்குரிய விஷயம் தான். அது பொருளாதாரம் ஆகட்டும், இன அழிப்பு ஆகட்டும் எல்லாமே ஒன்று தான். ஒன்று மற்றொன்றோடு பின்னிபிணைந்து இருக்கிறது. அதை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதில் இருக்கிறது கலை.
படத்தை பற்றி சொல்ல வேண்டும் அல்லவா?? எல்லா கதாபாத்திரங்களும் நன்றாகவே எழுதப்பட்டு இருக்கிறது. அந்தந்த பாத்திரங்களை உணர்ந்து நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – தயாரிப்பு நிர்வாகம் – கலை – இசை – எடிட்டிங் என்று ஒரு நல்ல திரைக்கதைக்கு இவையெல்லாம் முக்கிய பங்காற்றி இருக்கிறது. அந்த சர்ச் காட்சியை மட்டும் இன்னும் கொஞ்சம் டிரிம் செய்திருந்தால் சரியாக இருந்திருக்கும். உண்மையில் அந்த காட்சியை நோக்கி தான் திரைக்கதையும் இறுதி காட்சியும் எழுதப்பட்டு இருக்கிறது என்பதற்கு சொன்னேன்.
ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் சினிமா சார்ந்த துறைக்கு வரும் போது இந்த மாதிரி குப்பை புத்தகங்களையோ அல்லது சினிமா எடுப்பது எப்படி என்கிற பேச்சு போட்டிகளையோ தவிர்ப்பது நல்லது. சினிமா சார்ந்த கல்வி நிலையங்களும் அல்லது சினிமா சார்ந்து இருக்கும் துறைகளில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக்கொள்வது உங்க மனநலத்திற்கும் பண நலத்திற்கும் உகந்தது. இதுக்கும் டூரிஸ் பேம்லி திரைப்படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறிர்கள் அல்லவா? 500 கோடி ரூபாயில் உருவாகும் திரைப்படத்திற்கும் 10 கோடிகளில் உருவாகும் டூரிஸ்ட் பேம்லி திரைப்படத்திற்கும் உள்ள சம்பந்தங்களை ஒப்பிட்டு சொல்லதான்.
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் சசிகுமாரின் கடைகுட்டியாக வரும் அந்த சிறுவனின் நடிப்பும் – நடனமும், அழகும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. இன்னொன்று இருக்கிறது.! “ ஆல்தோட்ட பூபதி “பாடலுக்கு சிம்ரனின் அந்த சிம்பிளான நடனம் ஒரு உதாரணம். நாஸ்டாலிஜியை திணிக்காமல் மிக இயல்பாக கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப உருவகப்படுத்துவது எப்படி என்பதற்கு இந்த படம் ஓர் சிம்பிள் எடுத்துக்காட்டு..
Vijis Palanichamy