கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், வெளிநாடுகளில் வேலை தேடியபோது சமூக வலைத்தளத்தில் வந்த விளம்பரத்தை நம்பி ரூ.64 லட்சம் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடி தொடர்பாக குஜராத்தைச் சேர்ந்த ஒருவரை கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைத் தேடி முகநூலை (Facebook) பயன்படுத்தி வந்த அந்தப் பெண், உக்ரைன், குரோஷியா, போலந்து, செர்பியா போன்ற நாடுகளுக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்துள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த விளம்பரம் அளித்தவர்களைத் தொடர்பு கொண்டபோது, குறைந்த செலவில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
குஜராத்தில் உள்ள ‘சன்ஸ்டீலர் பிரைவேட் லிமிடெட்’ என்ற போலி நிறுவனத்தின் பெயரில் அந்தப் பெண்ணுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனை நம்பிய அந்தப் பெண், பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூபாய் 64 லட்சத்தை அவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
நீண்ட நாட்கள் ஆகியும் வேலை குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், அந்த நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முயன்றபோது, பணி அனுமதி, விசா, அழைப்பு ஆவணங்கள் போன்றவற்றுக்காகவே பணம் செலுத்தப்பட்டதாகக் கூறிவிட்டு, பின்னர் அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், உடனடியாக கோவை மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முகமது இர்பான் ஷேக் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து சைபர் க்ரைம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்த சமூக வலைத்தள விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றும், போலியான நிறுவனங்களிடம் பணத்தை இழக்காமல் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.