ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியை முன்னிட்டு குரு ஸ்தலங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
நவக்கிரகங்களில் சுப கிரகம் என அழைக்கப்படும் குரு பகவான், ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வு குருபெயர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மே 11ம் தேதி பிற்பகல் 1.19 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடைந்தார்.
இதனை முன்னிட்டு, குரு பரிகார ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் ஆலயத்தின் மூலஸ்தான பிரகாரத்தில் எழுந்தருளி உள்ள குரு பகவானுக்கு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து வழிபட்டனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் சுவாமி மற்றும் அம்மனுக்கு இடையே தனி சந்நிதியில் தனி விமானத்துடன் நவக்கிரக குரு பகவான், ராஜகுருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். இந்தநிலையில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவானுக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.