உறவுகளில் தனித்துவமானது “தாய்மாமன் “உறவு என்பார்கள் தமிழர்கள். தமிழில் தாய்மாமன் சார்ந்த சினிமாக்கள் கொட்டிக்கிடக்கிறது. அதிலிருந்து இந்த மாமன் எப்படி வேறுபடுகிறது.
இன்பாவின் (சூரி) அக்கா கிரிஜாவுக்கு (சுவாசிகா) திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தைக்கு ஒட்டுமொத்த அன்பையும் கொடுத்து, இன்பாவே வளர்க்கிறார். இந்தச் சூழலில் இன்பாவுக்கு ரேகாவுடன் (ஐஸ்வர்யா லட்சுமி) திருமணம் ஆகிறது. ஆனால், எப்போதும் மாமாவுடனே ஒட்டிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையால் இன்பாவுக்கும் ரேகாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனால் இன்பாவின் மனைவிக்கும் கிரிஜாவுக்கும் உறவு முறிகிறது. இறுதியில் விரிசல் சரியாகி உறவுகள் சேர்கிறதா? இல்லையா? என்பதுதான் கதை.
இதன் கதையை நடிகர் சூரி எழுதி இருக்கிறார். தாய்மாமனுக்கும் மருமகனுக்குமான ஆத்மார்த்தமான அன்பை மையப்படுத்தியும் அதற்குள் குடும்ப சென்டிமென்டைத் தூக்கலாகவும் கலந்து எழுதிய கதையை இயல்பாகப் படமாக்கி இருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ்.
ராஜ்கிரண் – விஜி தொடர்பான காட்சிகளில், குட்டிபத்மினியும் பண்ணையாரும் படத்தில் வருவது போல் ஒர் எபிசோட். அது மாமன் திரைக்கதைக்கு பயன்படும் என்று அப்படியே எடுத்து உருவி வைத்துள்ளார்கள். நமக்கு தான் நெருடுகிறது. நல்ல நடிகர்கள். கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். ஆனால் சிக்கல் என்னவென்றால்? ஒரு கட்டத்திற்கு மேல் ” வீட்ல தான் டி.வி இருக்கு இல்ல” ஏதாவது சீரியல்-ல இதே மாதிரி தானே இருக்கும்” என்று யோசிக்க வைக்கிறது.
தொடர்ந்து வரும் இதுபோன்ற எமோஷனல் காட்சிகளால் திரைக்கதையில் ஸ்பீடு பிரேக் விழுந்த உணர்வு ஏற்படுகிறது. குறிப்பாக தந்தையை ஓரங்கட்டிவிட்டு குழந்தையை மாமன் வளர்த்தெடுப்பது போன்ற காட்சிகள் கொஞ்சம் ஓவர் கற்பனை. இதற்கும் ஜெயபிரகாஷ் சூரியிடம் சொல்லியும் சூரி அதை உணர மறுப்பது அந்த கதாபாத்திரங்களில் மீது நம்பகதன்மையை கெடுக்கிறது. சூரி மட்டுமல்ல மொத்த குடும்பமும் ஏன்! அந்த ஊருமே அப்படி தான் இருக்கிறது. இது மாதிரி ஓவர் ஆக்டிவாக குழந்தைகளை நாம் பல வீடுகளில் பார்த்திருப்போம்.பெற்றோர்களை தொந்தரவு செய்துக்கொண்டே இருப்பார்கள். ஒரு வேளை எல்லா மிடில் நகரங்களில் இப்படி தான் இருக்கிறார்களா ? என்னவோ?..
தாய்மாமனாக சூரி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல் மனைவி மற்றும் அக்காவுக்கு இடையே மாட்டிக் கொண்டு விழிப்பது உள்பட தன்பங்களிப்பை நேர்த்தியாகச் செய்திருக்கிறார், ஐஸ்வர்யா லட்சுமி அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக நடித்து கவர்கிறார். குறிப்பாக தன்னுடைய உணர்வுகளை கணவர் உள்வாங்கிக் கொள்ளவில்லையே என்கிற ஏக்கத்தில் மிகை இல்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அக்காவாக சுவாசிகா அமர்க்களப்படுத்தி இருக்கிறார். மருமகனாக நடித்திருக்கும் பிரகீத் சிவன் பண்ணும் டார்ச்சர், ரசிக்க வைக்கிறது. முதிய தம்பதியாக வந்து அறிவுரைகளை வழங்கும் ராஜ்கிரண் – விஜி, அம்மாவாக கீதாகைலாசம், ஜெயப்பிரகாஷ், அக்கா கணவராக வரும் பாபா பாஸ்கர் ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித்துள்ளனர். பால சரவணனுக்கு அதிக காட்சிகள் இல்லை. விமல் வந்து செல்கிறார். எதற்கு என்று தான் தெரியவில்லை.
ஹேசம் அப்துல் வஹாப்பின் பின்னணி இசை படத்துக்கு உதவியிருக்கிறது. தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும், கணேஷ் சிவாவின் படத்தொகுப்பும் பக்கபலம்.
உண்மையில் படம் எனக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. ஆனால் தியேட்டரில் பார்வையாளர்கள் பரவசமாக பார்க்கிறார்கள். ரசனை என்பது ஒருவர் சார்ந்து மட்டுமல்ல.. அது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் அல்லவா.. திரையரங்கில் குடும்பம் கொண்டாடுகிறது.
Viji’s palanichamy