இந்தியாவில் ஒரு தசாப்தத்திற்கு மேலாக நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார். அவரது தலைமையிலான பாஜக ஆட்சியில் பல்வேறு சாதனைகள் நடந்துள்ளதாக அமைச்சர் பெருமக்கள் பட்டியலிட, அவற்றுக்கு நிகரான கேள்விகளை இணையவாசிகள் முன்வைத்து வருகின்றனர். அவற்றை விரிவாகப் பார்ப்போம்.
3-வது முறையாக பாஜக ஆட்சி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2014 மற்றும் 2019 களில் நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைத்தது. அந்தப் 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் இந்தியா பணமதிப்பிழப்பு சர்ச்சையையும் எதிர்கொண்டது, உலகப் பொருளாதாரத்தில் 5-வது இடத்திற்கு உயர்ந்த சாதனையையும் சந்தித்தது. இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. அதன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பாஜகவின் சாதனைப் பட்டியல்கள் சமூக ஊடகங்களை நிறைத்து வருகின்றன. அவையே, பல கேள்விகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் புகழாரங்கள்
11 ஆண்டு கால சாதனைகளைப் பட்டியலிட்டு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
- 140 கோடி இந்தியர்களின் கூட்டான பங்களிப்பின் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. தற்போது நம் நாடு பருவநிலை செயல்பாடு, டிஜிட்டல் கண்டுபிடிப்பு போன்றவற்றை வலியுறுத்தும் உலகளாவிய முக்கிய குரலாகவும் விளங்குகிறது.
- கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை நவீனமாகவும், தன்னிறைவு பெறுவதாகவும் மாற்றப்பட்டுள்ளது. அதை மேம்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு முன் ராணுவ தளவாடங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வந்த நிலை மாறி, தற்போது வெளிநாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ளது. 2024 – 25 இல் மட்டும் ரூ.23,622 கோடிக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.
- விண்வெளி ஆராய்ச்சி, பயணம் ஆகிய வரலாற்றுச் சாதனைகள் பாஜக ஆட்சிக் காலத்தில் சிறப்பாக நடந்துள்ளது.
- பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், ஆயுஷ்மான் பாரத், பாரதிய மக்கள் மருந்தகம், பிரதமரின் விவசாய கவுரவிப்பு நிதி எனப் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மூலம் நாட்டுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.
என விவரங்களைப் பட்டியலிட்டுள்ளார். மறுபக்கம், இந்தியாவின் பொற்காலம் பாஜகவின் 11 ஆண்டு ஆட்சிக் காலம்தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழந்துள்ளார். அவரது பதிவில்,
- பாஜகவின் 11 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மறுமலர்ச்சி அடைந்திருக்கிறது. சமூக நீதி, கலாசார பெருமை, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றின் புது சகாப்தம் உருவாகியுள்ளது.
- பாஜக ஆட்சிக்கு முன் நாட்டின் கொள்கைகளில் தெளிவில்லாமலும், ஊழல் அதிகரித்தும் இருந்தது. மோடியின் தலைமையிலான ஆட்சியில், தலைமைப் பண்பில் உறுதியோடு இருந்தபடி சேவை மற்றும் பாதுகாப்பை உயர்ந்த முறையில் வழங்கும் கொள்கைக்கு இந்தியா உயர்ந்துள்ளது.
உள்ளிட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சாதனையா? சோதனையா?
இப்படி அரசு தரப்பிலான புகழாரங்கள் ஓலிக்க, அதன் ஆதரவாளர்கள் இக்கருத்துகளை வேகமாகப் பரப்பி வரும் நிலையில், எதிர்த்தரப்பில் சில கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.
ஊழலற்ற அரசா? – மோடி தலைமையிலான அரசு ஊழலற்ற ஆட்சி என்ற புகழாரத்தை முன்வைத்து, ரபேல் போர் விமான ஒப்பந்தம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள், ஆயுஷ்மான் பாரத் திட்டம் உள்ளிட்டவற்றில் எழுந்த ஊழல் புகார்களின் நிலைமை என்ன ஆனது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். கணக்கு தணிக்கை வாரியத்தின் உரிமைகளை மத்திய அரசு சிதைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பொருளாதார முன்னேற்றமா? – உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளதாகக் கூறப்படும்நிலையில், சர்வதேச பட்டினி பட்டியலில் 127 நாடுகளில் இந்தியா 105வது இடத்தில் உள்ளது. 81 கோடி மக்கள் உணவுப் பொருட்களுக்கு அரசு உதவியையே நம்பி வாழ்கிறார்கள். 55% விவசாயிகள் கடனில் சிக்கி, 19 கோடி விவசாயிகள் ரூ.33 லட்சம் கோடி கடனில் தவிக்கிறார்கள். இது வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை ஐந்து மடங்கு அதிகரித்ததாகக் கூறும் அரசின் பிம்பத்துக்கு முரணாக உள்ளது.
பாதுகாப்பில் சுயசார்பா? – ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா முன்னேறியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், உலக அளவில் ஆயுத ஏற்றுமதி நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை. சீனா, இந்தியாவை விட பலம் பொருந்திய நாடாகத் தொடர் அச்சுறுத்தல் பயத்தைக் கொடுத்தபடி இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் 2019 முதல் 2024 வரை மட்டுமே 579 பயங்கரவாத தாக்குதல்கள் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் பொதுமக்கள் 168 பேர், பாதுகாப்புப் படை வீரர்கள் 247 பேரும் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் பேரதிர்வைக் கிளப்பிய பெஹல்காம் தாக்குதலும் நம் நாட்டின் மூன்றடுக்குப் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
நிதிநிலையில் சமநிலையா? – 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை இல்லாமல், தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) ஆதரவை தேவைப்பட்டது. இதனால், கூட்டணி கட்சிகளின் மனப்போக்கு திட்டங்களை மத்திய அரசு ஏற்கும் சூழல் உருவாகி உள்ளது. இதனாலேயே ஒட்டுமொத்த நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக இல்லாமல் பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு மட்டும் நன்மை செய்யும் பட்ஜெட்டாக மாறியிருக்கிறது.
எனப் பலவிதமான ஐயங்களும் கேள்விகளும் முன் வைக்கப்படுகின்றன. இவற்றின் பின்னணியில் பாஜகவின் சாதனைகள் வெளிப்படையாகத் தெரியும் அதே நேரத்தில், கோட்டை விட்ட இடங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.