சென்னை துறைமுகத்தில் ரசாயன வாயுக் கசிவு ஏற்பட்டு தலைமைச் செயலகத்தில் காற்று மாசடைந்தது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை துறைமுகம், சென்னை மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையின் முக்கிய நிர்வாக மற்றும் நீதித்துறை அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட நச்சுப் புகை பரவல் சம்பவம் தொடர்பாக தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை துறைமுக நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விரிவான விளக்க அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2-ம் தேதி மதியம் சுமார் 12.15 மணியளவில், சென்னை காமராஜர் சாலை, தலைமைச் செயலகத்திற்கு எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் திடீரென வெள்ளை நிறப் புகை பரவியது. இதனால் அப்பகுதியில் உள்ள தலைமைச் செயலகம், ரிசர்வ் வங்கி வளாகம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டது.
புகை பரவியதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் பலர் இருமல், கண் எரிச்சல், தொண்டை அரிப்பு மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
முதற்கட்ட விசாரணையில், சென்னை துறைமுக வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கந்தகக் குவியல்கள் கடும் கோடை வெப்பத்தால் வேதியியல் மாற்றமடைந்து தீப்பற்றியிருக்கலாம் என்றும், அல்லது துறைமுகத்தில் இருந்த கண்டெய்னர் ஒன்றில் ஏற்பட்ட கசிவின் விளைவாக நச்சு வாயு வெளியேறியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கவலையின் அடிப்படையில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கைப் பதிவு செய்துள்ளது. நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் பிரசாந்த் கர்ஹவா அடங்கிய அமர்வு, சம்பவத்தின் உண்மை நிலை, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
