பீகார் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தேர்தல் ஆணையம், மத்திய பாஜக அரசு ஆகியவை மீது, அடுத்த அணுகுண்டை வீசி அதிர்ச்சிக் கொடுத்துள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. சில தினங்களுக்கு முன்னர், கர்நாடகாவில் நடைபெற்ற வாக்குத் திருட்டு குறித்தும், பீகாரில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டது பற்றியும், ஆதாரங்கள் வெளியிட்டு பகீர் கிளப்பியிருந்தார் ராகுல் காந்தி. கர்நாடக மாநிலம் மகாதேவபுரா தொகுதியில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் 5 வெவ்வேறு முறைகளில் திருடப்பட்டப்பட்டதாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டு பொதுமக்களை அதிர வைத்தது. முக்கியமாக தேர்தல் ஆணையத்தின் தரவுகளை வைத்தே வாக்குத் திருட்டு நடைபெற்றிருப்பதை ராகுல் காந்தி காட்டி சுட்டிக் காட்டியிருந்தார்.
தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். அதேபோல் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றிலும் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அடுத்ததொரு பெரும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் ராகுல் காந்தி. இன்னும் ஓரிரு மாதங்களில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம், பாஜக அரசுக்கு அடுத்த பேரிடியாக அமைந்தது. இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு இப்படியொரு நிலை இருந்ததில்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து வாக்காளர்கள் நீக்க முறைகேடுக்கு எதிராக ராகுல் காந்தி பீகாரில் மாபெரும் பேரணி நடத்தினார். வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில் நடைபெற்ற இந்தப் பேரணியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். இப்பேரணியின் இறுதியில் பேசிய ராகுல் காந்தி, “முதலில் வெளியிட்ட வாக்குத் திருட்டு வெறும் அணுகுண்டுதான்; விரைவில் அதைவிட சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு ஒன்றை போடவுள்ளோம்” எனக் கூறியிருந்தார். அதனை தற்போது வீசி பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அதன்படி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ஏற்கனவே அவர் கூறியிருந்ததை போல ஹைட்ரஜன் அணுகுண்டை வீசியுள்ளார். அதாவது, “எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலுவான ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறேன்” என்றே தனது உரையை தொடங்கினார். அதே வேகத்தில் அவர் வெளியிட்ட தகவல்களும் ஆதாரங்களும், மீண்டும் தேர்தல் ஆணையத்துக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. பீகாரில் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியது போல, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில், 6,018 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
அதாவது, காங்கிரஸுக்கு வாக்களிக்கும் முடிவில் இருந்த சமூகத்தினர்களை குறிவைத்து அவர்களது வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி, தலித்துகள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தவர்களில் 6,018 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இப்படி வாக்காளர்களை நீக்க குறிப்பிட்ட சில மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது எங்கிருந்து யாரால் இயக்கப்பட்டது எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதேநேரம், தமிழ்நாடு, மராட்டியம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இந்த வாக்குகளை நீக்க விண்ணப்பிக்கப்பட்டிருப்பதையும் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார்.
மேலும், கோதாபாய் என்ற பெயரில் போலியாக ஒரு Login ஐடியை உருவாக்கி, அதிலிருந்து 12 வாக்காளர்களை நீக்க விண்ணப்பித்துள்ளனர். ஆனால், தனது பெயரில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது தெரியாது என்று கோதாபாய் என்ற பெண் பேசிய காணொலியை மேடையிலேயே ஒளிபரப்பு செய்தார் ராகுல் காந்தி. அதேபோல் சூர்யகாந்த் என்பவர் பெயரில் 12 வாக்காளர்களை நீக்க 14 நிமிடத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. யார் பெயரில் வாக்குகளை நீக்க விண்ணப்பிக்கப்பட்டதோ, அவர்களை மேடைக்கு அழைத்து வந்து செய்தியாளர்களிடம் முன் பேச வைத்தார் ராகுல் காந்தி. இதேபோல், இந்தியா முழுவதும் வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டு வருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளது, பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இந்த செய்தியாளர்களின் சந்திப்பின் போது, டெல்லியில் இருக்கும் ஒருவர், தமிழர்களுக்கே தெரியாமல் தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களின் வாக்குகளை அழித்து வருவதாக ராகுல் காந்தி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாக்குத் திருட்டு தொடர்பான அனைத்து தகவல்களும் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளே இருந்துதான் கிடைத்தன. இது இத்தோடு நிற்கப்போவதில்லை என உறுதியாகக் கூறிய ராகுல் காந்தி, தன்னால் மட்டும் இதனை தடுத்து நிறுத்துவது சாத்தியமில்லை, இந்திய மக்களால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளார். அதேபோல், இப்படி வாக்குகளை நீக்குபவர்களை, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாதுகாத்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள தேர்தல் ஆணையம், இது ஆதாரமற்றவை எனத் தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் ஆன்லைன் வாயிலாக வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தவொரு பெயரையும் நீக்க முடியாது என்பதையும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. கர்நாடகாவின் ஆலாந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்குச் சில முயற்சிகள் நடந்தது உண்மைதான் என்றாலும், அது தோல்வியிலேயே முடிந்ததாகவும் வாக்காளர்கள் யாரும் நீக்கப்படவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதோடு, இந்த விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையமே புகாரளித்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.