பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சமீபகாலமாக கட்சிக்குள் நிலவி வரும் குழப்பங்கள் மற்றும் அன்புமணி ராமதாஸ் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தனது மகனான அன்புமணி ராமதாஸ் மீது பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
“தவறு செய்தது அன்புமணி அல்ல, நான் தான்”
“அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன். தவறு செய்தது அன்புமணி அல்ல, 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்து விட்டேன்” என்று ராமதாஸ் தெரிவித்தார். “தர்மபுரியில் ஒரு கூட்டத்தில் அன்புமணி பேசியதை நான் பார்த்தேன். ‘நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் பதவி நீக்கம்?’ என்றும் அன்புமணி பேசி இருந்தார். இது முழுக்க முழுக்க மக்களையும், கட்சிக்காரர்களையும் திசை திருப்பும் முயற்சியாகும்” என்றும் அவர் கூறினார்.
“வளர்த்த கடா என் மார்பில் எட்டி உதைத்தது”
தான் செய்த தவறுகளை மறைத்து அன்புமணி மக்களிடமும், கட்சிக்காரர்களிடமும் அனுதாபம் பெற முயற்சி செய்வதாக ராமதாஸ் குற்றம் சாட்டினார். “இனிப்பை தவிர்த்து கசப்பான மாத்திரைகளை கொண்ட மருந்தை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு நடத்திய கட்சியில் கலகத்தை அன்புமணி ஏற்படுத்தினார். வளர்த்த கடா என் மார்பில் எட்டி உதைத்தது” என ராமதாஸ் வேதனையுடன் தெரிவித்தார்.
“ஆதாரங்களுடன் தான் பேசுகிறேன்”
கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து அன்புமணி பல தவறுகளை செய்திருப்பதாகவும் ராமதாஸ் கூறினார். “அழகான ஆளுயர கண்ணாடியான கட்சியை ஒரு நொடியில் உடைத்தது யார்? புதுச்சேரியில் நடந்த பொதுக்குழுவில் மேடை நாகரீகம் இல்லாமல் செயல்பட்டது யார்?” என்று கேள்வி எழுப்பிய ராமதாஸ், “ஏதோ போகிற போக்கில் இதை நான் சொல்லவில்லை. ஆதாரங்களுடன் தான் சொல்கிறேன்” என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார். பா.ம.க.வில் நிலவும் உட்கட்சி பூசல் மீண்டும் வெளிப்படையாக வெடித்துள்ள இந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.