கோவையில் பொது இடங்களில் நேரடியாகக் களமிறங்கிப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கி அதிரடி ஆக்‌ஷனில் ஈடுபட்டு உள்ளனர் சிங்கப்பெண்கள்.

கோவையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின்படி பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண்கள்’ சிறப்புப் படை தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. பெண் போலீசாரைக் கொண்ட இந்தப் படை, நகரின் பரபரப்பான இடங்களில் நேரடியாகப் பொதுமக்களுடன் தொடர்புகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணம், சமீபகாலமாக எதிர்க்கட்சியினர் கோவையின் சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து எழுப்பி வரும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், நகரின் பாதுகாப்புச் சூழலை மேம்படுத்தும் நோக்கத்திலும் இந்தச் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் காவல் துறை செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், உக்கடம், சிங்காநல்லூர், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் ‘சிங்கப்பெண்கள்’ படையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். கூட்டம் அதிகமாக உள்ள பேருந்துகளுக்குள் நேரடியாக ஏறி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், அலுவலகங்களுக்குச் செல்லும் பெண் தொழிலாளர்கள் உள்ளிட்டோரிடம் உரையாடினர்.

“பயணத்தின்போது ஏதேனும் அச்சுறுத்தல், தொல்லை அல்லது நெகட்டிவ் சம்பவங்கள் நிகழ்ந்தால் அஞ்சாமல் உடனடியாக காவல் துறையின் அவசர உதவி எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்” என்று தைரியம் ஊட்டினர். மேலும், பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ‘காவலன் SOS’ மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தினர். இந்த செயலியின் மூலம் அவசர நிலையில் இருப்பிடத்தைப் பகிர்ந்து உதவி கோரலாம் என்பதை விளக்கினர்.

மாலை வேளைகளில் உக்கடம் பெரியகுளம் ‘ஐ லவ் யூ கோயமுத்தூர்’ செல்பி ஸ்பாட் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் இந்தப் படையினர் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக, பூங்காக்களுக்கு வரும் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் வரும் பெற்றோர்களிடம் தனிப்பட்ட முறையில் உரையாடினர். தற்போது இளம் தலைமுறையினரிடையே பரவி வரும் ‘டிரக்ஸ் கலாச்சாரம்’ மற்றும் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், சந்தேகத்துக்குரிய சூழல்களில் உடனடியாகக் காவல்துறையை அணுகுமாறும் வலியுறுத்தினர். இந்த ‘சிங்கப்பெண்கள்’ படையின் செயல்பாடுகள் கோவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்கள் தன்னம்பிக்கையுடன் வெளியில் செல்லும் சூழலை உருவாக்கும் வகையில் இத்தகைய தொடர் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version