தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு அவசரகால மேலாண்மை மற்றும் காவிரியில் நீர்ப்பாசனத்திற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முக்கிய அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, ராமச்சந்திரன், சேகர் பாபு, சிவசங்கர், பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முக்கிய அதிகாரிகள் முருகானந்தம் (தலைமைச் செயலாளர்), சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், டிஜிபி சங்கர் ஜீவால், அமுதா ஐஏஎஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அலுவலர்கள் மற்றும் அமைச்சர்களிடம் முதல்வர் கூறியதாவது, “மாவட்ட ஆட்சியர்கள் தங்களது பணிகளில் முழுமையாக தயாராக இருக்க வேண்டும். கடலோர மாவட்டங்கள் புயல் மற்றும் கனமழையால் நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை இப்போது துவங்க வேண்டும்.” என்றும், அவசர செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், “இந்த பருவமழையில் இயல்பான மழை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தாலும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரிகளில் கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதற்கான முன்னெச்சரிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
“மக்களின் குறைகள் பெரும்பாலும் சமூக வலைதளங்களின் வாயிலாக முன்வைக்கப்படுகின்றன. அதனால் அவை தொடர்பான புகார்களை நேரில் பார்த்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
மின்வெட்டு சம்பந்தப்பட்ட தகவல்களை SMS மூலமாக மக்களுக்கு அனுப்பும் முறையை செயல்படுத்தவும், ஆபத்தான பகுதிகளை சரிவர மதிப்பீடு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.