திரும்பிய பக்கமெல்லாம் ‘முத்தமழை’ பாடல்தான் டிரண்டிங். அதிலும் சின்மயி பாடியது சிறந்ததா? தீ பாடியது சிறந்ததா? என ரசிகர்கள் மத்தியில் பெரும் பஞ்சாயத்து நடக்கிறது. இதில் தக் லைஃப் படத்திற்கு லாபமோ இல்லையோ சின்மயிக்கு அடித்திருக்கிறது பரிதாப அலை. அவரும் அதை கூடியவரையில் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்.
சின்மயியும் மீட்டூவும்
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் மூலம் அறிமுகமான பின்னணிப் பாடகி சின்மயி, அதன்பின் பாடிய பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட். பின்னணிப் பாடகராக மட்டுமின்றி பல நடிகைகளுக்குப் பின்னணிக் குரலும் பேசி வந்தார் சின்மயி. திரை வாழ்க்கை நன்றாகவே சென்றுகொண்டிருந்தபோதுதான் 2018-ம் ஆண்டு MeToo குற்றச்சாட்டை முன் வைத்தார் சின்மயி. பாடலாசிரியர் வைரமுத்துவும், நடிகர் ராதா ரவியும் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் புகார் அளித்தார். முதலில் அதற்கான சாட்சிகள் தன்னிடம் இருந்ததாகச் சொன்னவர், பின்னர் அதைக் காணவில்லை என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், பலரைத் திரைத்துறையில் நடந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளிக்கொணர வைத்தது.
சின்மயிக்கு தடை
மீட்டூ சர்ச்சை பூதாகாரமாக உருவெடுத்தபோது திடீரென்று சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து வெளியேற்றப்பட்டார். மீட்டூ குற்றச்சாட்டு காரணலத்தால்தான் அவர் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், டப்பிங் யூனியனுக்கு முறையாகச் சந்தா செலுத்தாமல் விட்டதால்தான் அவர் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அதன்பின் தமிழ்த் திரையுலகில் பாடவோ, பின்னணி பேசவோ சின்மயிக்கு தடை விதிக்கப்பட்டது. அறிவிக்கப்படாத ஒரு நிழல் தடையாகவே அது இருந்து வந்தது. கடைசியாக 96 படத்தில் பாடியபின் அவருக்குப் வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்தது. ஏறத்தாழ 5 ஆண்டுகள் தடையில் இருந்த சின்மயி, கடந்த 2023-ம் ஆண்டு, லியோ படத்தில் த்ரிஷாவுக்குப் பின்னணி பேசினார். அதன்மூலம் மறுபடியும் அவர் தமிழ்த் திரையுலகில் நுழைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சின்மயி-க்கு முத்தமழை
இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ள தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார் சின்மயி. அப்படத்தில் இடம்பெற்றுள்ள முத்தமழை என்ற பாடலின் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப் பாடல்களைச் சின்மயி தான் பாடியிருக்கிறார். தமிழில் மட்டும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ பாடியிருக்கிறார். இதனால், இசை வெளியீட்டு விழாவில் சின்மயி இந்தப் பாடலின் தமிழ் வெர்ஷனைப் பாடினார். அதன் காணொலி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், ரசிகர்கள் “சின்மயி பாடிய வெர்ஷனா? தீ பாடிய வெர்ஷனா?” என்று தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதில் சின்மயி பாடியதுதான் நன்றாக இருக்கிறது என அதிகக் கருத்துகள் வருகின்றன. இப்படிப்பட்ட குரல் வளமும் திறமையும் கொண்ட சின்மயி ஏன் இந்தப் பாடலைத் தமிழில் பாடவில்லை என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
ரசிகர்கள் கேள்வியும் சின்மயி பதிலும்
சமூக ஊடகம் முழுக்க சின்மயி பாடிய முத்தமழை பாடலைப் போட்டு ரசிகர்கள் வைப் செய்து வந்த நிலையில், தடை பற்றிய செய்தியை ஏதும் அறியாத அப்பாவி ரசிகர் ஒருவர், “ஏன் சின்மயி பாடவில்லை. அவர் ரிட்டயர் ஆகி விட்டாரா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்குத் தானாக வந்து பதிலளித்த சின்மயி, “நான் ஏன் ரிட்டயர் ஆகப் போகிறேன். தமிழ்த் திரையுலகில் நான் தடைசெய்யப் பட்டுள்ளேன்” என்று பரிதாபமாக பதில் கூறினார். ஏன், என்னாச்சு என்றெல்லாம் அடுத்தடுத்த கேள்விகள் வர, “மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். நடிகர் ராதா ரவியின் காலில் விழச் சொன்னார்கள். நான் செய்ய மறுத்துவிட்டேன்” என்று உடைத்துப் பேசி உரசலுக்குப் பொறி வைத்துள்ளார் சின்மயி.
வைரமுத்து வேண்டாம்.. சின்மயி வேண்டுமா?
அதே வேளையில் குற்றம் சாட்டியவருக்கு வாய்ப்பு வழங்கிவிட்டுக் குற்றம் சாட்டப்பட்டவரை மட்டும் ஏன் புறக்கணிக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதாவது மீட்டூ குற்றச்சாட்டு வைக்கப்பட்டதில் இருந்தே, மணிரத்னம் – ஏ.ஆர் ரஹ்மான் இணை பாடலாசிரியர் வைரமுத்துவைப் புறக்கணித்துவிட்டது. குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட 2018-ம் ஆண்டு வெளியான செக்கச் சிவந்த வானம் படம்தான் மூவரும் சேர்ந்து பணியாற்றிய கடைசிப் படம். அதன் பிறகான பொன்னியின் செல்வன், தக் லைஃப் என்ற இரண்டு படங்களிலும் வைரமுத்துவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மீட்டூ வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது வைரமுத்து குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே. குற்றவாளி அல்ல. அப்படி இருக்கையில், வைரமுத்துவை நேரடியாகவே புறக்கணித்துவிட்ட மணிரத்னமும், ஏஆர் ரஹ்மானும், சின்மயியை மட்டும் மேடை ஏற்றி அழகு பார்க்கலாமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அறிவிக்கப்படாத தடை ஒருபக்கம், எப்படி மேடை ஏற்றினார்கள் என்ற கேள்வி ஒருபக்கம், சின்மயி பாடியதுதான் நன்றாக இருக்கிறது என்ற ரசிகர்களின் வரவேற்பு ஒருபக்கம் என மீண்டும் பேசுபொருளாகியிருக்கும் சின்மயி தன் மீதான இந்தப் பரிதாப அலையைப் பயன்படுத்திக் கொள்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.