இந்தியாவில் இந்தாண்டு மட்டும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 70 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் உள்ள இந்து மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான மானசா தேவி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தாண்டில் இந்தியாவில் கும்பமேளா, ஐபிஎல் கிரிக்கெட் வெற்றி கொண்டாட்டம், கோயில் நிகழ்ச்சிகள் என பல இடங்களில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக,
1. ஜூன் 4, 2025: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 18 ஆண்டுகளில் முதல் முறையாக கோப்பையை வென்ற பெங்களூரு அணி, தங்கள் வெற்றியை கொண்டாடும் வகையில் நடத்திய அணிவகுப்பு நிகழ்ச்சி ஒரு அசம்பாவிதமாக மாறியது. சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.
2. மே 3, 2025: கோவாவின் ஷிர்காவ் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லைராய் தேவி கோவிலின் வருடாந்திர திருவிழாவின்போது அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்தனர்.
3. பிப்ரவரி 15, 2025: புதுடெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ் செல்வதற்கு ரெயிலில் ஏற காத்திருந்தபோது இந்த கோர சம்பவம் நிகழ்ந்தது.
4. ஜனவரி 29, 2025: மகா கும்பமேளாவின் சங்கம் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர்.
5. ஜனவரி 8, 2025: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.