கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இ-மெயில் மூலமோ அல்லது தொலைப்பேசி வாயிலாகவோ இந்த மிரட்டல் வரும். அதனை நம்பி அதிகாரிகளும் தேடுதல் பணியினை தொடருவர். பிறகு அது புரளி என்பது தெரியவரும். அப்படி நாடாளுமன்றத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் லாஞ்சி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ சாம்ரைட். இவர் கடந்த 2022-ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இந்திய தேசியக் கொடி, வெடிப் பொருட்கள் தொடர்பான சில சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மற்றும் அரசியலமைப்பின் நகல், புகார் கடிதம் ஆகியவை இருந்துள்ளது. அந்த புகார் கடிதத்தில் தனது கோரிக்கைகளை பட்டியலிட்டிருந்த அவர், தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், நாடாளுமன்ற கட்டடத்தை வெடிக்கச் செய்வதாக மிரட்டல் விடுத்திருந்தார்.
இது தொடர்பாக அவர் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படது. இந்த வழக்கு விசாரணை முடிவில், IPC பிரிவு 506 (2)-ன் கீழ் மிரட்டல் விடுத்த முன்னாள் எம்.எல்.ஏ சாம்ரைட்டுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி விகாஸ் துல் தீர்ப்பளித்தார். மேலும் நாடாளுமன்றக் கட்டிடத்தை வெடிக்கச் செய்வதாக மிரட்டியது, அரசு சொத்துக்களை அழிக்கும் அச்சுறுத்தல் என நீதிபதி சாடினார்.