பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.20லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காஷ்மீர் போலீசார் அறிவித்துள்ளனர்.
2019-ம் ஆண்டு நடந்த புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி பஹல்காமில் நடத்த பயங்கரவாதத் தாக்குதல் தான் கொடூரமானது. இந்த தாக்குதலில் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான சேர்ந்த முக்கிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று பொறுப்பேற்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பையும், உலகம் முழுவதும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தனது வெளிநாடு பயணத்தை பாதியிலேயே முடித்து விட்டு நாடு திரும்பிய பிரதமர், அனைத்துக் கட்சி கூட்டம், ராணுவ அதிகாரிகளுடன் கூட்டம் என ஆலோசனை மேற்கொண்டு பதில் தாக்குதலுக்கு அனுமதி அளித்தார்.
தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்கள் தகர்க்கப்பட்டது. 4 நாட்களாக நடந்து வந்த தாக்குதல்கள் தற்போது அமெரிக்காவின் சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், பஹல்காமில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை தெற்கு காஷ்மீர் முழுவதும் போலீசார் சுவரொட்டிகளாக ஒட்டினர். அவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.20லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும், தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.