2024-ம் ஆண்டுக்கான தேசிய தூய்மை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திராவின் விசாகப்பட்டினம் துறைமுகம் முதலிடம் பிடித்துள்ளது.
நாட்டில் தூய்மை இந்தியா திட்டம் பரவலாக அமலில் உள்ளது. ஸ்வச் பாரத் என்ற பெயரில் நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஸ்வச்தா கி பாகிதரி எனப்படும் தூய்மை பணியில் பங்கெடுத்தல், சம்பூர்ண ஸ்வச்தா எனப்படும் முழு அளவிலான தூய்மை ஆகிய திட்ட தொடக்கத்தின் கீழ் துறைமுகங்களில் தூய்மை பணி நடந்து வருகிறது. இந்த சூழலில், மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் சார்பில் தூய்மை மற்றும் சுகாதாரம் வாய்ந்த துறைமுகங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது.
இதில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான தேசிய தூய்மை விருதுகளுக்கான இந்த போட்டியில், ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகம் முதல் இடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகம் 2-வது இடமும், இந்திய கடல்சார் பல்கலைகழகம் 3-வது இடமும் பிடித்துள்ளது.
இது குறித்து விசாகப்பட்டின துறைமுக செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூய்மை மற்றும் சுகாதார திட்ட நடவடிக்கையில், விசாகப்பட்டினம் துறைமுகம் தனித்தன்மை வாய்ந்த முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது என அமைச்சகம் மெச்சத்தக்க வகையிலான பாராட்டுகளை தெரிவித்து இருப்பதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.