வார விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ளது. இதில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் தொடங்கவுள்ளது.
கடந்த 21-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் போன்றவை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் அலுவல் எதையும் கவனிக்காமல் நாடாளுமன்றம் முடங்கியது.
தொடர்ந்து மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்னைகள் குறித்து 28-ம் தேதியில் இருந்து விவாதத்தை தொடங்க எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டன. மக்களவையில் இன்றும், மாநிலங்களவையில் நாளையும் விவாதம் தொடங்குகிறது.
இரு அவைகளிலும் தலா 16 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆளுங்கூட்டணி தரப்பில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்று பேசுவார்கள். எதிர்க்கட்சிகள் தரப்பில் இரு அவைகளின் எதிர்க்கட்சி தலைவர்களான ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தங்கள் வாதங்களை முன்வைப்பர். அதனால் இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறம் என எதிர்பார்க்கப்படுகிறது.