உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று பதவியேற்றார். அட்டவணைப் பிரிவைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் நேற்று (மே13) முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நாட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாயை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று பதவியேற்றார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பி.ஆர். கவாய்க்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங், முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, மத்திய அமைச்சர் ஜெ.பி.நாட்டா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் பிறந்த பி.ஆர் கவாய், கேரளா மற்றும் பிகார் மாநில ஆளுநராக இருந்த ஆர்.எஸ் கவாயின் மகன் ஆவார். இவரது முழுபெயர் பூஷன் ராமகிருஷ்ண கவாய் ஆகும். இவர் அட்டவணை இனத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி ஆவார். வழக்கறிஞராக பணியாற்றிய பி.ஆர் கவாய், நாக்பூர் மற்றும் அமராவதி நகராட்சிகளுக்கும், அமராவதி பல்கலைக்கழகத்திற்கும் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் 2003-ம் ஆண்டு நாக்பூர் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் பம்பாய் உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 14 ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியாற்றியபோது பல முக்கிய வழக்குகளில் பி.ஆர் கவாய் வழங்கியுள்ள தீர்ப்புகள் குறிப்பிடத்தக்கவை.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்த வழக்கு, ராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளர் உட்பட 6 பேரை விடுவித்த வழக்கு, தேர்தல் பத்திரத் திட்டம், அட்டவணைப் பிரிவினருக்கான உள்ஒதுக்கீடு விதி அறிமுகம் உள்ளிட்ட வழக்குகளின் அமர்வில் பி.ஆர் கவாய் இடம்பெற்றவர் ஆவார். உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பது சட்டவிரோதமானது என்று கருத்து தெரிவித்து கடுமையாக எதிர்த்தவர் பி. ஆர் கவாய்.
தற்போது பதவியேற்றுள்ள பி.ஆர் கவாய், 65 வயதில் ஓய்வு பெற உள்ளதால் 6 மாத காலம் மட்டுமே தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.