தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனியார் நிறுவனத்திற்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
அதில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எதிர்காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தேர்தலுக்கு இன்னும் போதுமான கால அவகாசம் இருக்கிறது. இன்னும் சில காலம் காத்திருங்கள். அனைத்தும் தெளிவாகிடும் என்று கூறினார். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பியதற்கு,
எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும் எனவும் அதில் பாஜக பங்கு இருக்கும் என்றார். தேர்தலில் நாங்கள் அதிமுக தலைமையின் கீழ் போட்டியிடும் எனவும் முதலமைச்சர் அதிமுகவில் இருந்து வருவார் என்றும் கூறினார். அடுத்ததாக, நீங்கள் அ.தி. மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறீர்கள்? என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு,
பதில் அளித்த அவர், “நான் யாரையும் ஒன்றிணைக்கவில்லை. அது அவர்களது கட்சி குறித்த விஷயம். அவர்கள் தாங்களாகவே முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறினார். தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சி குறித்து நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, “என் நம்பிக்கை என்னவென்றால், அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலுவான நிலையில் இருக்கிறது” என்று அமித்ஷா பதில் அளித்தார்.