அதிமுகவின் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் எம்பி வெங்கடேஷ் பாபு கட்சி பணிகளை சரிவர செய்யாததால் பொறுப்பிலிருந்து நீக்கம். இம்மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளராக முன்னாள் எம்எல்ஏ செம்பியம் பெரம்பூர் கொளத்தூர் மேற்கு பகுதியைச் சேர்ந்த வி எஸ் பாபு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அமைப்பு ரீதியிலான மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.
அதன் பின் பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாவட்ட செயலாளரை நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. வெங்கடேஷ் பாபு கட்சி பணிகளில் அதிக கவனம் செலுத்தாமல், அவரது மாவட்டத்தில் கட்சி வளர்ச்ஞி பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்பதாலும், பூத் கமிட்டி நிர்வாகிகளை அமைக்காததாலும் நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன் தினம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி வெங்கடேஷ் பாபு வை கடுமையாக எச்சரித்ததாகவும் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து இன்று நீக்கப்பட்டுள்ளார்.
அதேபோல கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளராக இருந்த ஜான் தங்கம் மீது உள்ள அதிருப்தி காரணமாக அப்பொறுப்பில் இருந்து நீக்கி, ஜெயசுதர்ஷனை புதிய மாவட்ட செயலாளராக அறிவித்துள்ளார். இன்று நீக்கப்பட்டுள்ள 2 மாவட்ட செயலாளர்களையும் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.