நான் என்ன செத்தா போய்விட்டேன், எனக்கு எற்கு கூட்டுப் பிரார்த்தனை என்று சேலம் பாமக எம்எல்ஏ அருள் விமர்சித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதிய நியமனங்கள் குறித்த அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சட்டமன்ற உறுப்பினர் அருள், இனி கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளராகப் பணியாற்றுவார் என பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த நியமனம், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கட்சிக்குள் முக்கியத்துவம் அளிக்கும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அருள், சேலம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதல்கள் குறித்து செய்திகள் வெளியான நிலையில், இந்த புதிய நியமனங்கள் கட்சிக்குள் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இருப்பினும், இந்த நியமனம் கட்சியின் ஒட்டுமொத்த செயல்பாட்டிலும், குறிப்பாக வரவிருக்கும் தேர்தல்களிலும் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மாநில பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து பெறுவதற்காக சேலம் அருள் இன்று தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் அன்புமணியின் கூட்டுப்பிரார்த்தனை குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், நான் என்ன செத்தா போய்விட்டேன், எனக்கு எற்கு கூட்டுப் பிரார்த்தனை என்று நக்கலாக பதிலளித்தார்.