தவெக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விஜய், 3வது நாளாக இன்று நாமக்கல், கரூரில் மக்களை சந்தித்து பேச உள்ளார்.
நாமக்கல்லில் உள்ள கே.எஸ். திரையரங்கம் அருகே காலை 8.45 மணிக்கு பேச விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொய்யேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுரை வீரன் கோவில் அருகே விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், அங்கே கூட்டம் நடத்தினால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் போலீசார் அங்கு அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. எனினும், இந்த பிரச்சார கூட்டத்திற்கு அதிக கட்டுப்பாடுகல் விதிக்கப்பட்டுள்ளது.
விஜய் பிரச்சார வாகனத்தை யாரும் பின் தொடர கூடாது, விஜய்யின் பிரச்சார வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும். பொது சொத்துக்களை சேதப்படுத்த கூடாது, உரிய நேரத்தை கடந்து பிரச்சாரம் செய்யக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாமக்கல்லில் கிட்னி திருட்டு குறித்து விஜய் பேசலாம் என கூறப்படுகிறது.
இதேபோல், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். நண்பகல் 12 மணிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரூரில் திமுகவின் ஆதரவு பகுதி என்பதால், வழக்கம் போல் முதலமைச்சரை விமர்சித்து அவர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு தவெக தொண்டர்கள் இடையே எழுந்துள்ளது.