கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மீது விஜய் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு கருத்து கூற முடியாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் ரவுண்ட் டேபிள், மதராஸ் ஸ்டெர்லிங் ரவுண்ட் டேபிள் ஆகியவை இணைந்து, கரூர் சோமூர் அரசு பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு சென்னைக்கு சிறப்பு விமானப் பயணத்தை (Flight of Fantasy) ஏற்பாடு செய்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த முயற்சியில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை வழியனுப்பினார்.
விமானப் பயணத்திற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜியிடம், கரூர் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட அரசு தான் காரணம் என முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
நேற்று விஜய் வெளியிட்ட வீடியோவில், உங்களுக்கு பழிவாங்க வேண்டும் என்றால் என்னை பழிவாங்குங்கள். என் கட்சி தொண்டர்கள் மேல் கை வைக்காதீர்கள் என்று பேசி இருந்தார். அடுத சில நிமிடங்களில் கரூரில் தவெகவினரின் அலட்சியத்தை வெளிகாட்டும் வீடியோவை தமிழக அரசு வெளியிட்டு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளிக்கப்பட்டது. இந்த சூழலில் விஜய் குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பதை செந்தில் பாலாஜி தவிர்த்துள்ளார்.