கரூர் அசம்பாவிதத்திற்கு பிறகு அமைதியாக இருந்த தவெக தலைவர் விஜய் இன்று மாலை தவெக அலுவலகம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தலை ஒட்டி தவெக தலைவர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் கரூரில் நடந்த விஜய் பிரச்சாரத்தின் போது 41பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குறுகலான இடத்தில் நடந்த விஜய் பிரச்சாரத்தில் ஏராளமானோர் திரண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகினர். இது பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில் விஜய்க்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன.
பிரச்சாரத்தின் போது கூட்டநெரிசல் ஏற்பட்டதால் விஜய் அங்கிருந்து அவசரமாக புறப்பட்டார். திருச்சிக்கு வந்த விஜய் அங்கிருந்து விமானம் மூலம் அன்றிரவே சென்னை திரும்பினார். இதையடுத்து விஜய்யின் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்த தவெக நிர்வாகிகள் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டனர்.
நடந்த உயிரிப்புகள் தனக்கு மிகுந்த வேதனையை அளிப்பதாக விஜய் எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார். நேற்று உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தாருக்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்க இருப்பதாக கூறினார். எனினும், இவ்வளவு பெரிய அசம்பாவிதத்துக்கு பிறகு விஜய் பாதிக்கப்பட்ட மக்களையோ அல்லது பத்திரிகையாளர்களையோ சந்திக்காதது அவர் மீதான விமர்சனங்களை எழுப்பியது.
2நாட்களாக வெளியே தலைக்காட்டாமல் இருந்த விஜய், இன்று மாலை பனையூர் தவெக தலைமை அலுவலகம் செல்வதாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்திற்கு பின் முதல்முறையாக தவெக அலுவலகம் செல்லும் விஜய், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.