கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரையும், சிகிச்சையில் இருந்து மீண்டவர்களையும் விஜய் விரைவில் சந்திக்க ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக, மாவட்டச் செயலாளர்களுடன் தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கரூர் வேலாயுதம்பாளையத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். உயிரிழப்பு பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். புஸ்ஸி ஆனந்த், மற்றும் சி.டி.குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய், மாவட்ட செயலாளர்களை வாட்ஸ்அப் கால் மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதேபோல, 15 மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் விரைவில் கரூர் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரையும், சிகிச்சையில் இருந்து மீண்டவர்களையும் சந்திக்க ஏற்பாடுகளை செய்யுங்கள், என அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக பதிவு போடுபவர்கள் மீது வழக்கு பதியப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ அவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
வழக்கமாக மாவட்ட செயலாளர்களிடம் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பொதுச் செயலாளர் ஆனந்த் தான் பேசுவார். ,ஆனால் தற்போது விஜய் மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசியுள்ளார்.