இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 20-ம் தேதி லீட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 364 ரன்கள் எடுக்க, இங்கிலந்துக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
2வது இன்னிங்சில் இங்கிலாந்து 4-வது நாளில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில், இங்கிலாந்திற்கு 350 ரன்கள் தேவைப்பட்டது. இங்கிலாந்து வீரர்கள் பொறுமையாக ஆட, முடிவில் இங்கிலாந்து அணி 82 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து விரட்டிப்பிடித்த 2-வது அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்டில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 1,673 ரன்கள் குவித்துள்ளனர். இந்தியா- இங்கிலாந்து மோதிய ஒரு டெஸ்டில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இது தான்.
இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், “இந்த டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பானதாக எங்களுக்கு அமைந்தது. எங்களுக்கான வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் நாங்கள் பல கேட்ச்களை தவற விட்டோம். அதுமட்டுமல்லாமல் எங்கள் அணியின் கீழ் வரிசை வீரர்கள் பெரிய அளவு ரன்கள் சேர்க்கவில்லை.
இந்த இரண்டு விஷயங்களால் நாங்கள் இந்த போட்டியை இழந்து விட்டோம். நாங்கள் 430 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று நினைத்தோம். துரதிர்ஷ்டவசமாக எங்கள் கடைசி 6 விக்கெட்டுகள் வெறும் 25 ரன்களில் நாங்கள் இழந்து விட்டோம். இன்று கூட எங்களுக்கு பல வாய்ப்புகள் அமைந்தது. ஆனால் அதை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
நாங்கள் ஏற்கனவே முதல் இன்னிங்சில் கடைசி கட்டத்தில் கொத்தாக விக்கெடுகள் இழந்ததை பற்றி பேசினோம். வரவிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்த பிரச்சனையை நாங்கள் சரி செய்ய வேண்டும். இது போன்ற ஆடுகளங்களில் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு மிகவும் எளிதாக இருக்காது. எனினும் எங்கள் அணியில் உள்ள வீரர்கள் அனுபவம் இல்லாதவர்கள். இளம் வீரர்களால் நிறைந்தது எங்கள் அணி. எனவே அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இன்றைய நாளில் முதல் செஷனில் நாங்கள் நன்றாகவே பந்து வீசினோம். பெரிய அளவு ரன்களை கொடுக்கவில்லை. ஆனால் பந்து பழையதாக மாறியவுடன் ரன்களை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. பந்து பழையதாக மாறிய பிறகும் விக்கெட்டை எடுக்கும் யுக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பந்து பழையதாகிவிட்ட பிறகு அவர்கள் நன்றாக பேட் செய்தனர், அவர்கள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டனர். ஜடேஜா நன்றாக பந்து வீசி வாய்ப்புகளை ஏற்படுத்தினார். இதேபோன்று பும்ரா எந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. ஒவ்வொரு போட்டிக்கு முன்பு தான் நாங்கள் அதற்கான முடிவை எடுப்போம்” என்று அவர் கூறினார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 2-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது.