பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் இருநாடுகளுக்கும் மாறி மாறி தாக்குதலை மேற்கொண்டது. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விமான நிலையங்கள் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டது. அதேப் போல விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் கடந்த 9-ம் தேதி நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.
அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் தாக்குதலானது கடந்த சனிக்கிழமை (10.05.2015) நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் வரும் 17-ம் தேதி ஐபிஎல் போட்டியை தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, டிரோன் தாக்குதலால் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி மே 24-ம் தேதி ஜெயப்பூரில் நடைபெற இருப்பதாகவும், நிறுத்தப்பட்ட ஓவர்களில் இருந்து போட்டி தொடரும் எனக் கூறப்படுகிறது.
பிளே ஆஃப் சுற்றுகளையும் சேர்த்து மொத்தம் 17 போட்டிகள் நடைபெறவுள்ளது. பிளே ஆஃப் சுற்றின் படி குவாலிபையர் 1 – மே 29-ம் தேதியும், எலிமினேட்டர் – மே 30-ம் தேதியும், குவாலிபையர் 2 – ஜூன் 1-ம் தேதியும், இறுதிப் போட்டி ஜூன் 3-ம் தேதியும் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் போட்டிகள் நிறுத்தப்பட்டவுடன் வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர். தற்போதைய பாதுகாப்பு சூழல் மற்றும் தேசிய அணிக்கான பணி போன்ற காரணங்களால் வெளிநாட்டு வீரர்கள் இந்தியா திரும்ப தயங்குவதாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்களுடன் பிசிசிஐ-யும், அவர்கள் சார்ந்த ஐபிஎல் அணிகளும் பேச்சுவார்த்தை நடத்தி போட்டியில் மீண்டும் பங்கேற்க அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஐபிஎல் போட்டிக்கு திரும்புவது உறுதியாகியுள்ள நிலையில், மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், ஜோஷ் இங்லிஸ் ஆகியோர் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.