இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முஹமது சிராஜ், பும்ரா வேகப்பந்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களுக்கு சுருண்டது.
இந்திய, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களான டெகநரைன் சந்தர்பால், சிராஜ் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதேபோல், ஜான் கேம்பெல் 8 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார்.
தொடர்ந்து, பிரண்டன் கிங் (13), அலிக் அதென்ஷே (12) இருவரையும் முஹமது சிராஜ் வெளியேற்றினார். குல்தீப் யாதவ் தனது அபார சுழலால் ஷாய் ஹோப்பை போல்டாக்கினார். அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் போல்டானார்.
இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் முஹமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஜாஸ்பிரிட் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது.