இன்று 7.5% இட ஒதுக்கீட்டை தான் தான் கொண்டு வந்ததைப் போல மக்களிடம் பொய்யான பிரச்சாரத்தை ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மேற்கு ஒன்றியத்துக்கு உடபட்ட முள்ளிப்பாடி, தாமரைப்பாடி,பெரிய கோட்டை ஊராட்சி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் சிலுவத்தூர் சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் ஏற்பாட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் அதிமுக பொருளாளரமான திண்டுக்கல் சீனிவாசன்,கழக அமைப்புச் செயலாளர் ஆசைமணி ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன்,
“இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலையில் அண்ணா திமுக காலத்தில் கொண்டு வந்த பல்வேறு நல்ல திட்டங்களை இன்று ஸ்டாலின் அவர்கள் ஸ்டிக்கர் அவர்கள் கொண்டு வந்ததைப் போல ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.உதாரணமாக அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலும் வகையில் 7.5% உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்ததன் மூலம் நான்கு ஆண்டுகளில் 6 ஆயிரம் மாணவர்கள் ஒரு பைசா செலவு கூட இல்லாமல்இன்றைக்கு மருத்துவம் பயின்று வருகின்றனர்.” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆனால் இன்றைக்கு 7.5% இட ஒதுக்கீட்டை தான்தான் கொண்டு வந்ததைப் போல மக்களிடம் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் திரு ஸ்டாலின் அவர்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல அண்ணா திமுக ஆட்சியில் கொண்டு வந்த சாதனை குறிப்பிடப்படும்.” என் தெரிவித்தார்.
மேலும், “அண்ணா திமுகவும் புரட்சித்தலைவி அம்மாவும் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தையும் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தையும் பசுமாடுகள் கன்று வழங்கும் திட்டத்தையும் நிறுத்திவிட்டு மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு குப்பை வரி உயர்வு என இன்றைக்கு அனைத்து விலைவாசியும் உயர்த்தி மக்களை திண்டாட்டத்திலே விட்டிருக்கிறார்கள். இன்றைக்கு டாஸ்மாக்கில் பத்து ரூபாய் விலை வைத்து ஆயிரம் ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இதன் காரணமாக மத்திய அரசின் மூலம் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. அதைப் பற்றி இன்றைக்கு வரை ஸ்டாலின் அவர்களோ அவருடைய மகன் உதயநிதி அவர்களும் பேசவில்லை.” எனக் கூறினார்.
தொடர்ந்து, “இன்றைக்கு திமுக அமைச்சர்கள் ஒன்பது பேர் மீது வழக்குகள் பாய்ந்து அவர்கள் விடுதலை என்பதை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்கிறது. அதேபோல ஜாமினில் வந்த செந்தில் பாலாஜி அவர்கள் 471 நாள் சிறையில் இருந்ததற்காக மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. தற்பொழுது உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மீண்டும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது இப்படி திமுகவைச் சேர்ந்த பல அமைச்சர்கள் மீது பொன்முடி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அதிமுக பாஜகவுடன் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்திருப்பதாக கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “காங்கிரஸ் உடனும் அதிமுக கூட்டணி வைத்திருந்தது பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்திருந்தது அரசியலில் மாறி மாறி வரும் அவர் ஏதோ ஒன்றை பேசுகிறார் அதெல்லாம் உண்மை கிடையாது குறிப்பிட்டு தவறை பேசாமல் செல்வ பெருந்தகை பேசியது தவறு.” எனக் கூறினார்.