கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி கனமழை வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் (மே 25) நாளையும் (மே 26) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. இதன் காரணமாக இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.