திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே உள்ள பூதமரத்துப்பட்டி கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான 100 ஆண்டுகள் பழமையான காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததற்குக் கண்டனம் தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
ஆக்கிரமிப்பு விவகாரம்:
ஒவ்வொரு வருடமும் நடைபெறும் கோவில் திருவிழாவின்போது, கோவில் நிலத்தில் உள்ள நாடக மேடையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வரும் 28-ஆம் தேதி வள்ளி திருமணம் நாடகம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த குணசேகரன் உட்பட 5 பேர், இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி, கோவில் நாடக மேடை தங்களுக்குச் சொந்தமான இடத்தில் இருப்பதாகக் கூறி, அங்கு நாடகம் நடத்தக் கூடாது எனப் பிரச்சனை செய்து வருகின்றனர்.
அதிகாரிகள் அலட்சியம் மற்றும் பொதுமக்கள் போராட்டம்:
இதுகுறித்து கிராம மக்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், கடந்த 24-ஆம் தேதி திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தனிநபர் ஆக்கிரமிப்பைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
சமரசப் பேச்சுவார்த்தை:
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரச்சனைக் உரிய தீர்வு காணப்படும் என அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் சரவணனை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர்.
இந்தச் சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.