கனமழை காரணமாக இடுக்கி மாவட்டம் கட்டப்பனை நகரில் மூன்று மாடி வணிக வளாகக் கட்டிடத்தின் சுற்றுப்புறச் சுவர் இடிந்து விழுந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. நல்லவேளையாக, இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இன்று (திங்கட்கிழமை) இடுக்கி மாவட்டத்திற்கு அதிதீவிர கனமழைக்கான “ரெட் அலெர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப, மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், இடுக்கி மாவட்டத்தின் முக்கிய நகரான கட்டப்பனை பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால் கட்டப்பனை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வணிக வளாகத்தின் சுற்றுப்புறச் சுவர் இடிந்து விழுந்தது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
கார் பார்க்கிங்கை ஒட்டி இருந்த அந்த சுற்றுப்புறச் சுவர் இடிந்து விழுந்தபோது நல்லவேளையாக யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர் மழையால் மூன்று மாடிக் கட்டிடத்திற்கும் பாதிப்பு ஏற்படலாம் எனக் கருதி, கட்டிடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.