தாம்பரம் மாநகராட்சியில் அதிமுக உறுப்பினர்களின் பகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறி 10 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாநகராட்சி முழுவதும் மக்களின் அத்தியாவசிய அனைத்து அடிப்படை பிரச்சனைகளும் தலை விரித்து ஆடுவதாக அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
இதனால் பொதுமக்கள் கடும் அவதி உற்று வருவதாகவும் இது குறித்து ஒப்பந்த நிறுவனத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மாமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அதிமுக மாமன்ற உறுப்பினர்களின் 10 வார்டுகளில் எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் கூட்டத்தில் பேசியபோது, அவரை பேச விடாமல் திமுக உறுப்பினர்கள் அவையில் கூச்சலிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட தோழமை உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து 10 உறுப்பினர்களும் மாநகராட்சி கண்டித்தும், ஆளும் திமுகவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர், “திட்டமிட்டு எங்களுடைய பகுதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் மக்கள் சார்ந்த பணிகளில் மாநகராட்சி கவனம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டினார்”.
பின்பு மக்கள் பணிகளை செய்யாத திமுக அரசையும், தாம்பரம் மாநகராட்சியும் கண்டித்து கழக மாமன்ற உறுப்பினர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.