பாமகவில் தந்தை, மகன் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே மாறுபட்ட கருத்து எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், ”கடைசி உயிர்மூச்சு இருக்கும் வரை நான் தான் கட்சியின் தலைவராக இருப்பேன்” என அதிரடியாக அறிவித்தார். அத்தோடு அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்த நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமித்தது மட்டுமின்றி நேற்று (14.06.2025) ரகசிய ஆலோசனையும் நடத்தினார்.
நேற்று முன்தினம் (13.06.2025) தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், ”பெற்றொர் உயிருடன் இருக்கும்போதே பிள்ளைகள் அவர்களை கொண்டாட வேண்டும். தந்தை, தாயை மதிக்க வேண்டும் என சொன்னாலே அன்புமணிக்கு கோபம் வருகிறது, தந்தை, தாயை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அன்புமணி மைக்கை தூக்கி அடிக்கிறார். பாட்டிலை எடுத்து தாயை அடிக்கிறார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை எனக் கூறினால் அதெல்லாம் பொய் என அன்புமணி கூறுவார்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று உலக தந்தையர் தினத்தையொட்டி, அன்புமணி வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “”தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்! தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள்தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி. தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்!” என்று தெரிவித்துள்ளார்.