இன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் , தனது மகனை இறைவனுக்காக பலியிட முன் வந்த தியாகத்தை போற்றும் விதமாக இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
மேலும் இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஆடு,மாடு ஆகியவற்றை பலியிட்டு அவற்றை 3 பங்காக பிரித்து குர்பானி கொடுக்கும் நிகழ்வும் இன்று நடத்தப்படுகிறது. ஆடு,மாடு போன்றவற்றை பலியிட்டு அதில் ஒரு பங்கை நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழை, எளியவர்களுக்கும்,3-வது பங்கை தங்களுக்கும் என பகிர்ந்து , இறைச்சியினை உண்டு மகிழ்ந்து உற்சாகமாக பக்ரீத் பண்டிகையினை கொண்டாடி வருகின்றனர்.
கோவை
கோவையில் கரும்புக்கடை பகுதியில் இன்று காலைஇஸ்லாமிக் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கோர் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இந்த தொழுகையில் மஸ்ஜித் இஹ்ஷான் பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி இஸ்மாயில் இம்தாதி சிறப்பு தொழுகை நடத்தி சொற்பொழிவு நடத்தினார். இந்த தொழுகையின் போது புத்தாடை அணிந்து ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில், இமாம் ரபீக் அகமது யூசுபி தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 2000க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். தொழுகையின் முடிவில், பக்ரீத் பண்டிகையின் நடைமுறைகள் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொழுகையை நிறைவேற்றிய பின் இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்த்துக்களை கட்டித் தழுவி தெரிவித்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, இறைவனுக்காக தங்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் ஆடுகளை அறுத்து அதன் இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர். யூசூப்பியா நகர் , ஜின்னா நகர், பேகம்பூர், முகமதியாபுரம், நாகல் நகர், சந்துக்கடை, முவுன்ஸ்புரம், குள்ளனம்பட்டி உள்ளிட்ட நகரின் பல்வேறு பள்ளிவாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, தங்களது கடமைகளை நிறைவேற்றினர்.
தேனி
தேனி மாவட்டம் கம்பம் நகரில் கம்பம் மெட்டு செல்லும் சாலை பகுதியில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் ஏராளமான இஸ்லாமிய மக்கள் குடும்பத்துடன் இன்று ஈதுல் அல்ஹா என்னும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கம்பம்மெட்டு சாலை பகுதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.