18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே லைசன்ஸ் பெற்று இருசக்கர வாகனங்களை இயக்க முடியும் என போக்குவரத்து சட்டம் சொல்கிறது. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் ஓட்டிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதில் உயிரிழப்புகளும் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில் சென்னை பூந்தமல்லி சாலையில், ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று சிறுவர்கள் விபத்தில் சிக்கியதில், 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியை சேர்ந்த கலைவாணன் என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது 13-வயது மகன் பிரியன், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கலைவாணன் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது.
தந்தை இல்லாத நேரத்தில் அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற பிரியன், தனது நண்பர்களான 10வயது சிறுவர்கள் கார்த்திகேயன் மற்றும் முகிலன் ஆகியோருடன் சுற்றியுள்ளார். வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்தில் சிக்கினர்.
இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறுவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 13-வயது பிரியன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் காயமடைந்த 10 வயதேயான கார்த்திகேயன் மற்றும் முகிலன் ஆகிய இரண்டு சிறுவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.