இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களையும் ஜூலை எட்டாம் தேதி வரை சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீன்பிடித் தடைக்காலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிந்த நிலையில், ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று கரைக்கு திரும்பி கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேரை ஒரு படகுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 8ம் தேதி வரை அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் மற்றும் படகை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிக்க: தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமோக வெற்றி பெறும்.. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை!
மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சனைகளை கையாளுவதில் கட்டுப்பாடு மற்றும் பரஸ்பரம் புரிதலை உறுதி செய்வதற்கு இலங்கை அதிகாரிகளுடன் உரிய முறையில் தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.