சுந்தராபுரம் பகுதியில் பெண்ணின் கழுத்தில் 7.5 பவுன் தங்கத் தாலிக் கொடியைப் பறித்துச் சென்ற தென்காசியைச் சேர்ந்த நவீன் ஆன்டனி ராஜா (28) என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. கோவை மாநகர காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
சுந்தராபுரம் ராஜம் மருத்துவமனை அருகே இந்தச் செயின் பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த நவீன் ஆன்டனி ராஜா (28) என்பவரை சுந்தராபுரம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் (பாரதிய நியாய சன்ஹிதா 2023 @ 309(4) மற்றும் 351(3), 317(5), 3(5)) வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குற்றவாளி நவீன் ஆன்டனி ராஜா மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, சுந்தராபுரம் காவல் ஆய்வாளர் மற்றும் தெற்கு சரக காவல் துணை ஆணையர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின்படி, குற்றவாளி நவீன் ஆன்டனி ராஜா மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நவீன் ஆன்டனி ராஜா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.