கோவையில் ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர் ஒருவருக்கும், காவலருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் மற்றும் செல்போன் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சம்பவம் என்ன?
கோவையைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர், ஆன்லைன் பொருள் டெலிவரி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு பீளமேட்டில் இருந்து கோவை அரசு மருத்துவமனை வழியாக கெம்பட்டி காலனிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஒரு காவலர், ஹெல்மெட் அணியாமல் வந்த பிரசாந்தை மறித்து ஆவணங்களைக் காட்டுமாறு கேட்டுள்ளார். பிரசாந்த் தனது வாகனத்தின் நகல் ஆவணங்களை மட்டும் காண்பிக்க, அசல் ஆவணங்களை காவலர் கேட்டுள்ளார்.
செல்போன் உடைப்பு, வாக்குவாதம்:
இதையடுத்து, அந்த காவலர் பிரசாந்தின் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்துவிட்டுச் சென்றுள்ளார். இதை பிரசாந்த் கேள்வி எழுப்பியதால், கோபமடைந்த காவலர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, பிரசாந்தின் செல்போனை அங்கு தேங்கி கிடந்த மழை நீரில் தட்டி விட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வைரலாகும் வீடியோ:
பின்னர், இந்த சம்பவத்தை பிரசாந்த் தனது மற்றொரு செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், காவலர் செல்போனை பறிக்க முயன்றபோது, பிரசாந்த், “இவர் தான், என்னை அடித்தாரு, இவரைப் பார்த்துக்கோங்க, போனை உடைக்காதீங்க” என்று காவலரிடம் பேசிய காட்சிகள் பதிவாகியுள்ளன. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. காவலரின் இந்தச் செயல் குறித்து பொதுமக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்துள்ளன.