டி.ஐ.ஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் ஆகியோர் இடையே அண்மையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்தது. இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் விமர்சித்து கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பான வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், தனக்கு எதிராக பொதுவெளியில் சீமான் ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளை தெரிவிப்பதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் தனக்கு எதிரான அவதூறான, ஆதாரமில்லாத கருத்துக்களை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்கக் கோரி, ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும் அந்த மனுவில், இரண்டு கோடியே பத்து லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் திருச்சி சரக டி.ஐ.ஜி., வருண்குமாருக்கு எதிராக, சீமான் பேச இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சீமான் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாததால் வழக்கை அடுத்த மாதம் 15 ஆம் தேதி ஒத்திவைத்த நீதிபதி தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.