தங்க நகைக்கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் தங்க நகைக்கடன் பெறுவதைப் பெரிதும் முடக்கும் நடவடிக்கை என்று பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
ஏற்கனவே, ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ள இந்த விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், தங்க நகைக்கடன் விதிமுறைகள் மக்களின் பொருளாதாரத்திற்கு விடப்பட்டுள்ள சவால் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கையில் இருப்பது அரையணா காசாக இருந்தாலும், அதைச் சேர்த்து வைத்து, குண்டுமணி தங்கமாவது வாங்குவது நம் மக்களின் இயல்பு! இந்த தங்கம் ஆடம்பரத்துக்கான தங்கமல்ல; ஆத்திர அவசரத்திற்கான தங்கம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தங்க நகைகளை வங்கிகளில் வைத்து கண்ணியமான முறையில் கடன் பெறுவதற்கு இடையூறாக, தேவையற்ற கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி முன்மொழிந்திருப்பது, நம் நாட்டின் ஏழை – எளிய, நடுத்தர மக்களின் பொருளாதாரத்திற்கும் கண்ணியத்திற்கும் விடப்பட்டிருக்கும் சவால்!” என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், “ஏற்கெனவே அநியாய வட்டிக்குக் கடன் வாங்கி வட்டிக்கு கடன் கொடுப்பவர்களிடம் அவதியுறுவதும் – அவசரத் தேவைகளுக்காக லோன் செயலிகளில் கடன் பெற்றுச் சொல்லொணாத் துயருக்கும் ஆளாகியிருக்கும் மக்களைக் காப்பாற்றச் சிந்திப்பதை விட்டுவிட்டு, அந்தக் கொடூர வட்டி வலையில் சிக்க வைத்திடும் செயல்களைச் செய்வது ஏற்புடையதல்ல!” என்று ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.
இறுதியாக, “எனவே, தங்க நகைக்கடன் பெறுவதற்கான விதிமுறைகளைத் தளர்த்தி, ஏழை – எளிய, நடுத்தர மக்கள் கண்ணியத்துடன் வாழ உடனே நடவடிக்கை எடுத்திட வேண்டும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி கவர்னரையும் கேட்டுக் கொள்கிறேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.