இனிவரும் காலங்களில் கரூர் சம்பவம் போன்று நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பும், என் பொறுப்பும் தான் என்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று முன்தினம் (05-10-25) இரவு அப்போலோ மருத்துவமனையில் திடீரெனெ அனுமதிக்கப்பட்டார். மாதம் மாதம், பரிசோதனை மேற்கொள்வதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு செல்லும் ராமதாஸ், இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. மேலும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான நடிகர் கமல்ஹாசன், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் மருத்துவர் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர், மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “பாமக நிறுவனர் ராமதாசை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க வந்தேன் நலம் விசாரிப்பதற்கு முன்பே நல்ல செய்தி வந்தது.இன்று மாலை அவர் சிகிச்சை முடிந்து இல்லம் திரும்புகிறார் என்ற செய்தி கிடைத்தது. ராமதாஸ் இடம் பேசினேன் நலமாக உள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஓய்வில் இருக்கிறார் அவருக்கும் காய்ச்சல் குறைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வைகோவின் மகன் துரை வைகோவை சந்தித்து தந்தையின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தேன். இரு தலைவர்களும் மருத்துவமனையில் நலமாக உள்ளனர்
கரூர் சம்பவத்தை தினமும் பேச வேண்டாம் என்பது என்னுடைய கருத்து. கரூர் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ள விஷயம்.கரூர் சம்பவம் சோகம் தான், அதை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் கரூர் சம்பவத்தை பற்றி பேசிக்கொண்டே இருந்தால் சோகம் போய்விடாது.
இருந்தாலும் இனிவரும் காலங்களில் கரூர் சம்பவம் போன்று நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பும், என் பொறுப்பும் தான். எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம். நான் இப்போது பேசுவதை கூட அரசியலாக மாற்றலாம் ஆனால் கரூர் சம்பவத்தில் அரசியல் செய்யாமல் இருக்க வேண்டியது நம்முடைய கடமை” என்றார்.