கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் தொழிலகப் பயன்பாட்டிற்காக வழங்கப்படாது என்பதை எழுத்துப்பூர்வமான அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி:
திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார். அவரது மனுவில், “கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் குழாய்கள் மூலம் கடந்த 25 ஆண்டுகளாக விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் நடைபெறும் சட்டவிரோத மணல் குவாரிகளே நிலத்தடி நீர்மட்டம் ஆழத்திற்குச் செல்லவும், நீர் பற்றாக்குறைக்கும் காரணம். தற்போது திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏறத்தாழ 30 நீரேற்று நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதிகமாக விவசாயம் செய்யப்படும் பகுதி என்பதால், கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் தடுப்பணையை கட்டக் கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. திருச்சி ஆனந்தமேடு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள், நீரேற்று குழாய்கள் அமைக்கப்படுவது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே, கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள், நீரேற்று பைப்புகள் ஆகியவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
நீதிமன்ற விசாரணை:
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம் மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அரசுத்தரப்பில், “மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், “கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் தொழிலகப் பயன்பாட்டிற்கும் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டது.
அரசுத்தரப்பில், இதற்குப் பதிலளிக்கும் விதமாக, “குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் எடுக்கப்படுகிறது” என விளக்கமளிக்கப்பட்டது.
நீதிபதிகளின் உத்தரவு:
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “கொள்ளிடம் ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் தொழிலகப் பயன்பாட்டிற்காக வழங்கப்படாது என்பதை எழுத்துப்பூர்வமாக அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு” உத்தரவிட்டு, வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.