ஈரான்-அமெரிக்கா மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் வான்பரப்பு மூடப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதை அடுத்து, கத்தார், ஐக்கிய அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வான்பரப்பை முழுவதுமாக மூடியுள்ளன. இதன் காரணமாக விமான சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கத்தார் ஏர்லைன்ஸ் தனது அனைத்து விமான சேவைகளையும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது. இதன் விளைவாக, சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 6 புறப்பாடு விமானங்களும், 5 வருகை விமானங்களும் அடங்கும்.
ரத்து செய்யப்பட்ட விமானங்கள்:
புறப்பாடு விமானங்கள் (6):
குவைத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (நேற்று இரவு 11 மணி)
மஸ்கட் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (நள்ளிரவு 11.45 மணி)
அபுதாபி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (இன்று அதிகாலை 1 மணி)
தோகா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (அதிகாலை 3.55 மணி)
தோகா செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ் (அதிகாலை 4.20 மணி)
துபாய் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (காலை 6.35 மணி)
வருகை விமானங்கள் (5):
தோகாவிலிருந்து சென்னை வரும் கத்தார் ஏர்லைன்ஸ் (இன்று அதிகாலை 2.50 மணி)
தோகாவிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (அதிகாலை 2.50 மணி)
குவைத்தில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (காலை 6.55 மணி)
குவைத்தில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (காலை 10.20 மணி)
அபுதாபியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (காலை 10.25 மணி)
மாற்றுத் தரையிறக்கங்கள் மற்றும் தாமதங்கள்:
மத்திய கிழக்கு வான்வழி மூடப்பட்டதால், தாய்லாந்தில் இருந்து தோகா சென்று கொண்டிருந்த 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னையில் தரையிறங்கின. பயணிகள் அனைவரும் விமானத்திலேயே உள்ளனர். அவர்களுக்கு கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவனம் உணவு, குடிநீர் ஆகியவற்றை வழங்கி வருகிறது.
இவை தவிர, லண்டன், பஹ்ரைன், துபாய், அபுதாபி, ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
பயணிகளுக்கு அறிவுறுத்தல்:
சென்னை விமான நிலைய அதிகாரிகள், வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், தங்கள் விமானங்களின் புறப்படும் மற்றும் வரும் நேரங்களை அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு தெரிந்து கொண்ட பின்னரே பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ரத்து செய்யப்பட்ட மற்றும் தாமதமாகும் விமானங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.