தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த மாணவி நபிலா, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும், குரூப் 1 தேர்விலும் 27-வது இடம் பிடித்து இரட்டை வெற்றி பெற்று அரசுப் பணிக்குத் தேர்வாகியுள்ளார்.
கம்பம் மெட்டு காலனியில் உள்ள நபிலாவின் இல்லத்திற்குச் சென்ற தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மாணவி நபிலாவின் சாதனையைப் பாராட்டி, அவருக்குப் பரிசுகளையும் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நபிலாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த வெற்றி, தேனி மாவட்டத்திற்கும் கம்பம் பகுதிக்கும் பெருமை சேர்த்துள்ளது.