திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் தலைமையில் 2025-ம் ஆண்டுக்கான (வருவாய் தீர்வாயம்) சமபந்தி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று(26.05.2025) ஒருத்தட்டு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு நடைபெற்ற சமபந்தியில் அம்மையநாயக்கனூரில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே நக்கம்பட்டி சாலையோரத்தில் குடியிருந்து வரும் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் குடியிருந்து வரும் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கக்கோரி வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வட்டாச்சியர் விஜயலெட்சுமி அவர்களை அழைத்து பேசியதையடுத்து, கோட்டாட்சியர் சக்திவேலிடம் மனுவாக வழங்கினர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ”எங்களது தாத்தா காலத்திலிருந்து சுமார் 60-ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வீடுகட்டி குடியிருந்து வருகிறோம், கிராம நிர்வாக அலுவலர் முதல் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். வருடம்தோறும் ஒவ்வொரு ஜமாபந்தயிலையும் மனு அளித்து வருகிறோம், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
கடந்த இரண்டு நாட்களாக மனு வாங்க உரிய அதிகாரிகள் இல்லாததால் மூன்றாவது நாளில் கூட்டம் அலைமோதியது. பொதுமக்களுக்கு போதிய ஏற்பாடுகள் செய்யாததால் வெகுநேரம் காத்திருந்த பொதுமக்கள் திரும்பிச் செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது. எனவே வருவாய் தீர்வாயம் சமபந்தி நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் மற்றும் ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.