-
வத்திராயிருப்பு அருகே தீண்டாமை சுவரை அகற்றிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் வசித்து வரும் பகுதியில் பள்ளிக்கூடம் மற்றும் காட்டு வேலைக்கு செல்லும் வழியில் அரசு பொதுப்பாதையாகவும் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நடந்து செல்லக்கூடிய தெருவாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த பகுதியை மறித்து தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளதாக தொடர்ந்து அப்பகுதியில் வசிக்க கூடிய மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும், தீண்டாமை சுவரை அகற்றிட வலியுறுத்தி பலமுறை கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையில், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அப்பகுதி மக்கள் சார்பாக வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கடந்த 23 ம் தேதி 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் இது குறித்து அதிகாரிகளிடம் மனுவும் அளித்திருந்தனர்.
இந்த தீண்டாமை சுவரை அகற்ற வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று தீண்டாம சுவரை அகற்றிட திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் வ.புதுப்பட்டி பகுதியில் உள்ள தீண்டாமை சுவரை இடித்து தரை மட்டம் ஆக்குவதற்காக ஊர்வலமாக சென்றனர்.
அப்போது சுவற்றிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது.
இதில் இந்திய மாணவர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்த கண்ணன் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், காயமடைந்தவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சுமார் 35க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
தீண்டாமை சுவரை இடிக்கச் சென்ற திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவரும் நிலையில் வத்திராயிருப்பு பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீண்டாமைச் சுவரை அகற்ற சென்றவர்கள் மீது தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை எடுத்த காவல்துறை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.